நல்லமணமுள்ள தொன்றை நண்ணியிருப்பதற்கு நல்லமணமுண்டாம் நலமதுபோல்-நல்ல குணமுடையோர் தங்களுடன் கூடியிருப்பார்க்குக் குணமதுவேயாம் சேர்த்திகொண்டு.
– உபதேசரத்தினமாலை (69)
சீர்பாடல்
ஈட்டுரைகள் இல்லையென ஏக்கம் கொள்வார்
இணையற்ற குருபரம்ப ரையைவி யப்பார்!
ஆட்ட்டு பிறமதத்தார் ஆழ்வார் பாடல்
அற்புத்த்தில் பொறாமை கொள்வார்! அடடா! இந்த
மாட்சிமையை யார்தந்தார்? முடிச்சூர் வள்ளல்
மாண்புமிகும் அப்பார்ய ஸ்வாமி தந்தார்!
காட்சிக்குப் பிரபந்தம் கிடைத்தால், என்றும்.
கைகூப்பி அப்பார்ய வணக்கம் சொல்வோம்!
திருத்துழாயின் இளஞ்செடியே மணக்கும்! செல்வத்
திருக்குடும்பம் பிறந்திட்ட ஸ்வாமி, பால்ய
பருவத்தே ஆழ்வார்மேல் காதல் கொண்டார்
பஞ்சசமஸ் காரத்தை மாமு னித்தன்
திருவமசத் திடம்பெற்று வைண வத்தின்
திடலனைத்தும் குருமுகமாய்ப் பாடம் கேட்டு
அரும்சிங்க கர்ஜனையாய் வைண வத்தை
அகிலமெலாம் பரப்புகின்ற சபத மேற்றார்!
நாவலரின் தோழரிவர்! வடலூர் வள்ளல்
நண்பரிவர்! மகாவித்வான், யாழ்பா ணத்தார்
யாவரினும் அன்புபொண்டார்! மார்க்கம் காக்க
எதுவெனினும் துணிந்துநின்றார்! கிருத்து வத்தில்
தாவல்குறை காரணமாய் லிங்கத் தார்கள்
தகவலுக்கு மறுப்புரையாய் திகழ்ந்த வீரர்!
ஆவலுடன் சாற்றுமுறை தோறும் வள்ளல்
அப்பார்ய சுவாமிகள் நினைவில் வைப்போம்!
வெண்பா
மாயனையே மாயமாக்க மாய்சாலர் வந்தபோது
வாயடைத்து நின்றிருந்தார் மற்றவாதாம் – தூயவனைத்
தூற்றினரோ தூரோடு தூர்ந்துவிட தூயபணி
ஆற்றினவர் அப்பாரி யார்!
தனியன்
ஸ்ரீ த்ராவிடாதி நிகமார்த்த ஸமஸ்த தத்வ
ஞாநார்த்த நைபுண மிவாபர பாஷ்யகாரம்
ஸ்ரீ ஸ்ரீனிவாஸ குருவர்ய பதாப்ஜி பக்தம்
ஸ்ரீ அப்பாக்கிய தேசிக யஹம் ப்ரணதோஸ்மி நித்யம்.
அடியார்கள் வாழ! அரங்க நகர் வாழ
சடகோபன் தன் தமிழ்நூல் வாழ! – கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ! மணவாள மா முனியே
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்
வாழிதிருநாமம்
பரசமயத் தருவேரைப் பற்றறுத்தோன் வாழியே
பன்னு விசிட்டாத்வைதம் பரவளித்தான் வாழியே
திறமிகு நாரணர்செல்வம் திருத்துமவன் வாழியே
செந்தமிழ் வேதப் பொருளைத் தேர்ந்துரைப்போன் வாழியே
உரமிகு தென்னாரியர் சீருகந்தளித்தோன் வாழியே ஓங்குபராங்குச கோத்திர முதித்தபிரான் வாழியே
வரமிகு தன்னடியார்க்கு வாழ்வு தந்தான் வாழியே வயன் முடிச் சூரப்பாழ்வான் மலரடிகள் வாழியே.
நாள்பாட்டு
சிந்தை சிறந்துயர் பாகவதோத்தமர் செப்பிமகிழ்ந்திடுநாள்
சினமுறுசண் மதவாதியரெவரும் சிதறிநசிந்திடுநாள்
முந்தியவாரியர் மொழிகளினுட்பொருள் முதிர்சுவைபொலிவுறு நாள் முநிதியசேகரனுவல் விசிட்டாத்வைத முறைமுறை
பெருகிநொள் பந்தமுளோர் பவபாசமழிந்து பராங்கதியேரிடுநாள் பண்ணோடு பதின்மர்களருளிய தமிழ்மறை
பார்தனிலோங்கிநோள் அந்தமில்சீர்வரயோகி திருக்கண் அலர்ந்து களித்திடுநாள் அப்புதவப்பாரியர் வருமேடத்தாதியரை யொருநாளே.
மான் அபோரியர் திருவடிகளே சரணம்!
கலி காலத்தில் அடியவர்களுக்கும், ஆழ்வார்களுக்கும் அருளிச் செயலுக்கும், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்துக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அங்கு அவதரித்து, அவைகளை நிவர்த்தி செய்பவர் மாமுனிகளே! என்பது மேற்கண்ட பாடலின் கருத்து.
இந்தக் கலி காலத்தில் – கி.பி.18ம் நூற்றாண்டில், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்துக்குத் தீங்கு ஏற்பட்டது. அதை நீக்கத் தொண்டைமண்டலத்தில், சென்னைக்கு அருகாமையில் உள்ள முடிச்சூர் என்ற ஊரில், கி.பி.1800ம் ஆண்டு – ஸ்ரீ பராங்குசர் திருவதாரம் 4902 ரெளத்திரி வருடம், சித்திரை மாதம் திருவாதிரை திருநக்ஷத்திரத்தில் முதலியார் திருவம்சத்தில், உடையவரின் மறு திருவவதாரமாக ஸ்ரீமான். அப்பாரிய ஸ்வாமி திருவவதரித்தார்.
இவருடைய பெற்றோர் பெருஞ்செல்வந்தராகத் திகழ்ந்ததால், தம் பிள்ளைக்கு வீட்டிலேயே. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், வடமொழி க்ரந்தம் முதலியவற்றைப் பயிற்றுவித்து நன்கு வளர்த்தனர். இவர் இளமையிலேயே ஆழவார்களிடத்தில் அதிக பக்தி கொண்டு திகழ்ந்ததால், இவருக்கு ஜ்ஞான, பக்தி, வைராக்கியம் இளமை தொடங்கி வளர ஆரம்பித்தது. பெற்றோர்கள் தக்க வயதில் திருமணமும் செய்து வைத்தனர்.
ஸ்ரீவைஷ்ணவத்தில் அதிகம் ஈடுபட வேண்டும் – என்று கருதி ஸ்ரீரங்கம் சென்று கோயில் ஸ்ரீமத். உ.வே.கோமாண்டுர் இளைய வில்லி சிங்கராசார்யர் ஸ்வாமியின் திருவடிகளில் ஆச்ரயித்துப் பஞ்ச சமஸ்காரம் பெற்று, சிலநாள் அவரிடத்தில் காலக்ஷேபம் கேட்டு வந்தார்.
தமிழ்த்தாத்தா. உ.வே.சா போல இவரும் ஸ்ரீவைஷ்ணவ க்ரந்தங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டார். ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவர் திருமாளிகைக்கும் சென்று, அவர்களுக்குத் தொண்டு செய்து உகப்பித்து, ஒரு ஒலைச்சுவடி பெற்று வருவார். அதிலும் அரைப்பாடலே இருக்கும். அந்த அரைப்பாடலைப் பெரும் நிதியாகப் (புதையலாக) பெற்றுவருவார்.
ஒலைச் சுவடிகள் இருக்கும் திருமாளிகையைத் தேடிச்சென்று, அவர்களுடைய பிள்ளைகள் திருமணத்தைத் தம் பொருட்செலவில் நடத்திவைக்க, அதற்குக் கைமாறாக ஒன்று – இரண்டு ஓலைச்சுவடிகள் தருவார்கள், இப்படியே துண்டு துண்டாக ஒலைச்சுவடிகளைச் சேர்த்து, நாலாயிர திவ்ய ப்ரந்தமும் சேர்ந்தவுடன் அதனைஅச்சாக்க நினைத்தார். நாலாயிரத்தையும் அச்சில் ஏற்றி, தமிழ் நாட்டிற்கு முதன்முதலில் திவ்யப்ரந்தம் வெளியிட்டார். இதனை அவருடைய வரலாற்றுச் செய்யுளில் காணலாம். குரோதனி 1865
தனியன்
சாற்றுவதே நந் தமக்குச் சால அரிதாய் நிற்க
ஏற்றமிகும் சாத்திரங்கள் இவரோ – போற்றி அவை.
எட்டுப் பிரதியினிலே இருக்கப் பெட்டியின் கண்
பூட்டி வைப்பார் நன்கு பொதித்து
இந்த சமயத்தில் எம்பெருமானார் போலும்
வந்து உதித்தான் அப்பார்ய வள்ளலே – செந்தமிழன்
வேதம் ஆதி பல மெய்ந் நூல்கள் அச்சிட்டு அங்கு
ஆதியில் தந்தான் அவன்
ஆகையால் நாலாயிரத் திவ்யப்ரபந்தம், ரகஸிய க்ரந்தங்கள், வ்யாக்யானங்கள் ஆகியவற்றை “ஆதியில் தந்தான்” என்பதால், முதன்முதலில் அச்சிட்டு வெளி உலகுக்குக் காட்டியவர் இவரே!
இவர் காலத்தில் நெருங்கிப் பழகியவர்கள் புதுவை. விலக்ஷண கவி, ஏ.வே.ராமாநுஜ நாவலர் ஸ்வாமி, சூளை இரும்புத்தலை அழகிய மணவாள ஏகாங்கி ஸ்வாமி, இயற்றமிழ் ஆசிரியர் கி.விசாகப் பெருமாளையர், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார், வித்துவான் பள்ளி கொண்டான் பிள்ளை, யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர், வடலூர் இராமலிங்க வள்ளலார், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை போன்றவர்கள்.
விலக்ஷணகவி ஏ.வே.ராமாநுஜ நாவலரின் சீடர்கள் இன்றும் நாலாயிரத்திவ்யப்ரபந்தத்தைக் கையில் எடுத்துத் திறக்கும்போது “முடிச்சூர் அப்பாரியர் திருவடிகளே சரணம்!” என்று சொல்லி, திவ்யப்ரபந்தம் சேவிக்கும் நடைமுறை இன்றும் உள்ளது.
சம்பிரதாயத்தை குருமுகமாகக் கற்கவேண்டும் என்பதற்காக கோயில் பெரியவாச்சான் பிள்ளை திருவம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீமத்.உ.வே.ஸ்ரீநிவாஸாசார்யர் திருவடிகளில் பணிந்து, பன்னிரண்டு ஆண்டுகள் குருவிற்குப் பணிவிடை செய்து, வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசம், புராணம், ரகஸியக்ரந்தங்கள், நாலாயிரத்திவ்யப்ரபந்தம் சந்தை கேட்டு, அதன் வ்யாக்யானம், ஸ்தோத்ரபாடங்கள் அனைத்தும் கசடு அறக் கற்றார்.
ஆசார்யர் பாடம் சொல்லித் தரும்போது, சீடனின் ஞான-பக்தி வைராக்கியத்தைக் கண்டு,
பூதூரில் வந்து உதித்த புண்ணியனோ? – அல்லது
வந்தாய் போலே வராதாய் வராதாய் போல் வருவானோ?
என்ற திருவேங்கடமுடையானோ? -அல்லது
என்னை ஆட்கொள்ள வந்த வடுகநம்பியோ?
-என்று தம் சீடனைப் பலகால் அருளிச் செய்வாராம்.
இதிலிருந்து அப்பாரியர் ஸ்வாமி, ஆசார்யரிடம் பாடம் கேட்கும் போது பெரும்பூதூர் வள்ளலாகக் காட்சி அளித்துள்ளார் – என்ற உண்மை புலப்படுகிறது. ஆசார்யருக்குக் கஷ்டம் உண்டாகும் போது, ‘எப்படி வந்து என்ன செய்கிறார்?’ – என்று தெரியாமல் பொருள் – பணம் உதவி செய்வாராம். ஆசார்யன் அப்பொழுது “எனக்கு இவர் திருவேங்கடமுடையாகக் காட்சி அளிக்கிறார் ” என்பாராம்.
இவருடைய சிஷ்ருசையைக் கண்டு “எனக்கு இவர் வடுகனே!” என்பாராம்.
இப்படி ஆசார்யரிடம் ஜ்ஞானம், பக்தி, வைராக்யம் உடையவராகத் திகழ்ந்தார். அதன்பின் ஆசார்யர் இவரைப் பார்த்து, “இனிமேல் நம் ராமாநுஜரின் தரிசனத்தை வளர்ப்பாயாக!” – என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார்.
முடிச்சூர் அப்பாரியர் சென்னைக்கு வந்து, திருவல்லிக்கேணியில் “ஸ்ரீவகுள பூஷண பாஸ்கரோதய சபை” ஒன்றை நிறுவினார். அதில் தினமும் காலக்ஷேபம் செய்து வந்தார். இதனால் பாகவத கோஷ்டி பெருகி, வைணவம் தளிர ஆரம்பித்தது. இதனால் இவரது புகழ் நான்கு பக்கமும் பரவியது.
திருவல்லிக்கேணி எம்பெருமான், முடிச்சூர் ஸ்வாமியின் கனவில் சென்று, “உன் ஆசார்யரை வணங்கிவா!” – என்று நியமிக்க, அப்பொழுதே புறப்பட்டு ஸ்ரீரங்கம் சென்றார். “ஸ்வாமி சென்னையில் இல்லை” – என்று தெரிந்த, சில சமயவாதிகள், “தங்கள் மதம் சிறந்தது” – என்று கூற, அதை அபிவிருத்தி செய்ய சபைகளை ஏற்படுத்தி, அதன் மூலம் படங்களை வரைந்து தெரு முனைகளில் வைத்தனர்.
கிருத்துவ சமயத்தப் பரப்ப நினைத்த சிலர் வைணவர்கள் இடத்தில் வந்து, உங்களுடைய ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தில் 41வது ஸ்லோகம் “கரணம், காரணம், கர்த்தா, விகர்த்தா” என்று சொல்லுவதால், கர்த்தரான எங்கள் ஏசுபிரானைச் சொல்லுகிறது – என்று கூற ஆரம்பித்தனர்.’
சைவர்கள் பல இடங்களில் சபையை ஏற்படுத்தி, சிவபெருமான் உருவத்தில் வலது முழந்தாளில் பிரமனும், இடது முழந்தாளில் விஷ்ணுவும் பிறந்தார்கள் – என்ற படம் வரைந்து வைத்தனர். மஹாவிஷ்ணு கண்ணைப் பிடுங்கி, சிவனுக்குப் பூசை செய்வதாக வரைந்து வைத்தனர். அடிமுடி தேடியதாக வரைந்து வைத்தனர். சரப பக்ஷி நரஸிம்மனைக் கொன்றதாக வரைந்து வைத்தனர். அதற்குமேலும் சிறு சிறு நூல்கள்அச்சடித்து வெளியிட்டார்கள். அதில் தசாவதாரத்தையும் சிவபெருமான் அழித்தார் என்றும், வேத ஆரம்பத்திலும் – முடிவிலும் ஹரி:ஓம் என்று சொல்லுவதற்குப் பதிலாக, ஹர:ஓம் என்று அச்சிட்டு வெளியிட்டனர்.
ஒளவையார் வாக்கியமான “சினத்தைப் பேணில் தவத்திற்கு அழிவு” என்னும் வாக்கியத்தை ‘சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு’ என்று அச்சிட்டு மக்களை மயக்கினர். வைணவ நூலான கோவிந்த சதகத்தை, விகாரப்படுத்திப் பிரசாரம் செய்தனர். இப்படிப் பத்து வருட காலம் சென்னையில் கோலாகலமாக இருந்தது.
இதைக்கண்ட சில ஸ்ரீவைஷ்ணவர்களும் – மாயாவாதிகளாகவும், கைவல்யாத்திகளாகவும், கடவுளே இல்லை என்ற சூனியவாதிகளாகவும், காலையில் பஸ்மம் தரித்தும், மத்தியானம் திருமண் காப்புத் தரித்தும், அரியும் சிவனும் ஒன்று என்றும் கூழாட்பட்டவர்களாய் அஜ்ஞான, அந்நிதாஜ்ஞான விபரீத ஜ்ஞானம் தலைமண்டித் திரிந்தனர்.
இதைக் கண்ட பல ஸ்ரீவைஷ்ணவர்கள் கண்டும் காணாமல் இருந்தனர். அதற்காக அனுதாபம் கூடப் படவில்லை. இந்தச் சூழ்நிலையில் முடிச்சூர் ஸ்வாமியின் பிரதான சீடரான ஐஞ்ஜாமாருகம் (பூணூல் காற்று) ஸ்ரீமான், தி.கோ.இராஜகோபாலப் பிள்ளை, அவர்கள் தனக்கு அருகாமையில் வசித்த பரங்கிப் பேட்டை அரங்கசாமி நாயகரிடம் சென்று, ‘முடிச்சூர் ஸ்வாமி இல்லாததால் ஸ்ரீவைஷ்ணவம் சீரிழந்து வருகிறது – அவர் எப்பொழுது வருவார் என்று தெரியவில்லையே!’ என்று கலந்துரையாடி விட்டு வீட்டுக்குத் திரும்பினார்.
அன்று இரவு ஸ்ரீமான். தி.கோ இராஜகோபால் பிள்ளை கனவில் உடையவர் சேவை சாதித்து, “முடிச்சூர் அப்பாரியார் சென்னை வந்து இருக்கிறார். அவரால்தான் பாஹ்ய குதிருஷ்டிகளைக் கண்டிக்க முடியும்” என்று சொல்லி மறைந்தார். தாம் கண்ட கனாவினை உடனே ஸ்ரீமான், அரங்கசாமி நாவலரிடம் கூறினார். இருவரும் சேர்ந்து சென்னையில் இருந்த முடிச்சூர் ஸ்வாமி திருமாளிகைக்குச் சென்றனர். இவர்களுகளுடைய வருகைக்காக ஸ்வாமி திண்ணையில் காத்து இருந்தார். இருவரும் ஸ்வாமியை சேவித்துவிட்டு, தான் இரவு கனவு கண்டதைச் சொன்னார்கள்.
ஸ்ரீமான். அப்பாரியரும், எனக்கும் இன்று இரவு உடையவர் சேவை சாதித்தார் – இதையே தெரிவித்தார் – ஆகையாய் உடனடியாக ஓர் இடத்தைத் தேர்ந்து எடுத்து, அதில் ஒரு சபையை உண்டாக்குங்கள் என்றார். அவ்வாறே ஸ்ரீமான். இராஜகோபால் பிள்ளை தன் உறவினரான கோட்டூர் அரங்கசாமி பிள்ளையிடம் தங்கள் பங்களாவை சம்பிரதாயத்திற்குத் தர வேண்டும் என்று கூற, அவரும் அவ்வாறே அளித்தார். அந்த இடத்தில் பிரபாவ வருடத்தில், “ஸ்ரீபராங்குச விலாச திவ்விய சபை” முடிச்சூர் அப்பாரிய ஸ்வாமியால் உண்டாக்கப்பட்டது.
வேதத்திற்குப் புறம்பான மதங்களையும், வேதத்திற்குத் தவறாக கருத்தைச் சொல்லுபவர்களையும் அடக்க, ‘திராவிட தீபிகை தேசாபிமானி’ என்ற பத் த்திரிகைளின் மூலம் அறைகூவல் இட்டு அழைத்துப் பிற மதங்களை அடக்கினார். தெருக்களில் பிரசாரம் செய்த கிருத்துவ மதத்தினரைக் கண்டித்து – “கிறிஸ்து மத திரஸ்க்காரம்” என்ற நூலை எழுதி வெளியிட்டு, அவர்கள் பிரசாரத்தை ஓயும்படி செய்தார். (அதன் விலை 8அணா).
சைவர்களுக்காக “விஷ்ணு சமய விளக்கம்” என்ற நூலை எழுதி, விஷ்ணுவே முழுமுதற் கடவுள் – என்பதை ஆணித்தரமாக நிலை நாட்டினார் – அறை கூவல் இட்டார். சிலர் ஓடி ஒளிந்தனர். தெருவில் வைத்த விளம்பரங்களை தன்னடையே அழிந்தன. இருந்தாலும் சிலசமயம் சைவர்களின் ஆதிக்கம் மேலும் மேலும் தலைதூக்கும் போது, “லிங்க மத கண்டனம்” என்ற நூலை எழுதி அவர்களின் வாயை அடைத்தார். இந்த நூலில் அப்பாரிய ஸ்வாமி எழுதிய நடையைக் காண்போம்.
“இந்தச் சைவர்கள் சிவனுக்குப் பரத்துவத்தைக் கற்பித்து விஷ்ணுவை தூஷித்துத், தாங்கள் நசித்துப் போகிறதும் அல்லாமல் உலகத்தாரும் நசிக்கும்படி, -ராமலிங்கத்தைப் பூசை பண்ணினார் என்றும், சரபமாய்
சிவன் வடிவெடுத்து நரசிம்மத்தைக் கொன்றான் என்றும் இப்படி உச்சரிக்க, அரிதான பொய்களை எல்லாம் அச்சில் பதித்து பிரசித்தஞ் செய்கிறபடியால் அவர்களுடைய கடிதங்களினால் உண்டான இருள்களை வேத வசனங்கள் என்கிற சூரிய உதயத்தினாலே பிரகாசம் பண்ணி ஓட்டிவிடக் கடவோம்”
இதனால் ஸ்வாமி அப்பாரியருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல இன்னல்கள் செய்தார்கள். ஒரு நாள் ஸ்வாமி காலக்ஷேபம் செய்து விட்டு வீடு திரும்பும் போது, இருட்டான இடத்தில் இவரை வாளால் வெட்டவந்தனர். தூக்கிய கை தூக்கிய படியே நின்று விட்டது. சிலர் கைகால் செயல் இழந்து கீழ் விழுந்து விட்டனர். பின்னர் விடியற்காலை ஸ்வாமியின் திருவடிகளில் விழுந்து அழுது புரண்டு, தன் தவற்றை உணர்ந்த அவர்கள் பழைய நிலையை அடைந்தனர். அவர்களும் இவருடைய சீடர் ஆனார்கள்.
ஸ்வாமி காலக்ஷேபம் செய்து கொண்டு இருக்கும்போது, கூட்டமாகத் தடிகொண்டுவந்து தாக்க முற்பட்டனர்.
அவர்களைத் தம் திருக்கண்களால் நோக்க அவர்கள் கண் இழந்து அங்கேயே துடியாய்த் துடித்தனர் அவர்களையும் திருத்திப் பின்பு பணி கொண்டார்
சிலர் சுவாமிக்கு மறைமுகமாக சூனியம் வைத்தனர். அந்த தேவதை வைத்தவர் வீட்டிற்குச் சென்று அவர்களிடத்தில் “அவர் உடையவர் அவதாரம் – உனக்கு நன்மை உண்டாக வேண்டும் என்றால் அவர் திருவடிகளில் ஆச்ரயிக்கவும் – இல்லை என்றால் நீ செய்த தவற்றுக்கு உன் குலத்தையே நாசம் செய்வேன்” என்றது. இப்படி தன் தவற்றை உணர்ந்து வந்தவர்களையும் பின்பு சேர்த்துக் கொண்டார். இப்படி தேவதைகள் ஸ்வாமி உடையவர் அவதாரம் என்பதை வெளியிட்டது.
சென்னை பல்லாவரம் இராமாநுஜ கூடத்தில் காலக்ஷேபம் செய்யும் போது, தம்மை மறத்து காலக்ஷேபம் செய்வதைக் கண்ட ஸ்ரீமான். ஆப்காரி இஜாராதார் சந்திரசேகர பிள்ளைக்கு ஆதிசேஷனாகக் காட்சி கொடுத்துள்ளார். இதைக்கண்டு ஆனந்தபரவசராய் ஆடிப் பாடித் துள்ளினார்.
மேலும் மற்றொரு சமயம் இப்படி காலக்ஷேபம் செய்யும்போது தம் ஆப்த சீடரான குலசேகர ராமாநூஜதாஸர் அவர்களுக்கு ஆதிசேஷாம்சத்தைக் காட்டி இதையே திருவாராதனையாகக் கொள் என்றாராம். ஒரு நாள் திருவாதிரை நன்னாளில் ஆலந்தூரில் உள்ள “இராமாநுஜ சித்தாந்த உத்தாரக சபையில்” ஸ்ரீமான். அப்பாவு முதலியார் காலக்ஷேபம் செய்து கொண்டு இருந்தார். இதே சமயம் ஸ்ரீபெரும்பூதூரில் “ஸ்ரீராமாநுஜ ததீயாராதனை சபையிலும் காலக்ஷேபம் செய்தார். அந்த சபைக்கும் இந்த சபைக்கும் சென்றவர்கள் கலத்து உரையாடும் போது, “இது என்ன ஒரு ஆச்சரியம் இவர் ஓர் அவதார புருஷர் – உண்மையில் இவர் உடையவரே!” என்று வியந்தார்கள். அக்காலத்தில் அதிசயமாகப் பேசப்பட்டது இதுவும் ஒன்றாகும்.
ஸ்வாமி ஸ்ரீவைஷ்ணவ உண்மை நிலைகளையும், நுட்பமான பொருளையும், ஆழ்ந்த பொருள்களையும் தெள்ளத் தெளி உஉரைப்பதைக்கண்ட ஸ்ரீமான், நாதமுனி முதலியார் இவைகள் உன்புள்ளவரும் அறிய ஏற்பாடு செய்தால் மதி மாதனிருக்கும் என்று கூறு அப்படியே ஸ்வாமியும் அங்கீகரிக்க, ‘ஸ்ரீமத் தென்னாசார்யா பிரப மற்றும் ஸ்ரீமத் தென்னாச்சார்யப் பிரபாவ தீபிகை’ என்று இரண்டு நூல்கள் வெளிவந்தன.
இந்த நூல்கள் வெளிவருவதைக் கண்டு, ஸ்ரீமத், உவமங்க கிருஷ்ணமாசார்யர் என்பவர் பொறாமை கொண்டு, ஸ்வாமியை (நேரம் கண்டு பல தடவை திட்டியும், கண்டபடி பேசியும், பலர் முன்பு அவமன்றைம் செய்தார். இவர் ஒரு ஆசார்ய புருஷராகையால் சாத்வீகமாக நடந்து கொண்டார் ஸ்வாமி. சாத்வீகமாக இருப்பது கண்டு மேலும் மேலும் அவரிடத்தில் அபசாரப் பட்டார். ஒருநாள் உடையவர் அவர் கள போய், “நீஅப்பாவு முதலியாரை என்ன என்று நினைத்து இருக்கிற அவர் விஷயமாக ஒரு தனியனை சமர்ப்பித்து, அவ்வபசாரத்தைச் சங் செய்து கொள்ளவேண்டும் அவ்வாறு செய்யவில்லை என்றால் நாமும் உள் அபசாரத்தை மிப்பதாய் இல்லை” என்று கூறி மறைந்தார்.
விடிந்த உடன் எழுந்து ஒரு தனியனைச் செய்து, அப்பாவு முதலியார் திருமாளிகைக்குச் சென்று வேர் அற்ற மரம் போல் விழுந்து அழுது தம் அபசாரத்தைப் பொறுக்கும்படி வேண்டி இத்தனியனை அவருக்கு சமர்ப்பித்தார்.
ஸ்ரீத்ரவிடாதி-நிகமார்த்த ஸமஸ்த தத்வ!
ஐஞ்நார்த்த நைபுணம்.இவா பர பாஷ்யகாரம்!!
ஸ்ரீஸ்ரீநிவாஸ் – குருவர்ய பதாப்ஜ -பக்தம்-!
அப்பாக்ய -தேசிகம் அஹம் ப்ரணதோஸ்மி -நித்யம்
இந்த ஸ்லோகத்தை இன்று அளவும் அவருடைய சீடர்கள் அனுசந்தானம் செய்து வருகிறார்கள்
ஸ்வாமி சென்னையில் காலக்ஷேபம் செய்து ஆங்காங்கே சபைகளை உண்டாக்கினார் அவையாவன…..
1. திருவல்லிக்கேணி – ஸ்ரீவகுள பூஷண பாஸ்கரோதய சபை.
2. கோட்டூர் ஸ்ரீ பராங்குச விலாச திவ்விய சபை
3. சென்னை ஆழ்வார் சபை
4. இராயப் பேட்டையில் – வரவர முநீந்திரரை வாழ்த்துஞ் சபை
5. ஆலந்தூர் இராமாநுச சித்தாந்த உத்தாரக சபை 6.பல்லாவரத்தில் இராமாநுஜ கூடம்
7. எழும்பூர் – இராமாநுஜ கூடம்
8. பரசை -இராமாது ஐ கூடம்
9. சூளை -இராமாஜ கூடம்
10. சிந்தாதிரிப் பேட்டை – இராமாநுஜ கூடம்
11. கோமளபுரம் இராமாநுஜி கூடம்
12. ஸ்ரீபெரும்பூதூரில் ஸ்ரீராமாநுஜ ததீயாராதனை சபை
இந்த சபைகள் மூலம் கீழ்க்கண்ட நூல்கள் வெளியிடப்பட்டன. ஸ்ரீ அப்பாவு முதலியார் செய்த க்ரந்தங்கள்
1.கிறிஸ்து மத திரஸ்க்காரம்
2. விஷ்ணு சமய விளக்கம்
3. ஸ்ரீமத் தென்னாசாரியப் பிரபாவம்
4. பூமத் தென்னாச்சாரியப் பிரபாவ தீபிகை
5. கூரேச விஜயம்
6. ஹூண மத திரஸ்காரம்
7. திருவாய்மொழி வியாக்யானம்
8. நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம்
9. திருப்பல்லாண்டு வியாக்யானம்
10. இராமாநுஜ நூற்றந்தாதி வியாக்யானம்
11. ஸச் சம்பிரதாய தீபிகை
12. இலிங்க மத கண்டனம்
13. திருவாராதனைக் கிரமம்
14. சக்கராங்கன வைபவம்
அப்பாரியர் ஸ்வாமி இப்படி க்ரந்த காலக்ஷேபம் செய்து கொண்டு இருக்கும் போது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருமுகத்தில் இருந்த மீசை -திருமண்களை மாற்றி விட்டார்கள். அப்பொழுது தர்மகர்த்தாவான ஸ்ரீஉ.வே.சடகோபாசார்யரிடம் சென்று, “பாணாசுரன் மகள் தான் கண்ட கனவில் வந்த காதலனை எழுதும்படி – சித்ரலேகாவிற்குக் கூற. அப்பொழுது கண்ணன் உருவம் எழுதும்போது, இப்பொழுது திருவல்லிக்கேணியில் எழுந்தருளிய திரு உருவத்தை எழுதினாள். – என்று புராண வரலாறுகளைக் கூறி, மீசையும் திருமண்ணும் மறுபடிய வைக்கச் செய்தார். இந்தப் பெருமை ஸ்ரீமத் அப்பாரியரையே சாரும்.
இப்படி உலகுஎல்லாம் ஸ்ரீவைஷ்ணவைத்தைப் பாரப்புவதைக் கண்ட எம்பெருமான் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளும்படி நியமிக்க, சுவாமி திருவுள்ளம் உகந்து தம் ஆசார்யரைத் தியானித்துக் கொண்டு, கி.பி.18 துன்மதி வருடம் கார்த்திகை மாதம் 18ம் நாள் ஞாயிற்றுக்கிழ அமாவாசை அன்று திருநாடு அலங்கரித்தார். இவருடைய திருமேனியைக காணவேண்டும் என்று நினைத்து மறுநாள் சஞ்சயனத்தில் (பால்தெளித்தல்) தி. கோ. ராஜ்கோபால் பிள்ளைக்கு மட்டும முழு உருவத்துடன் காட்சி அளித்துள்ளார்.
இவருடைய பிரிவைத் தாங்கமுடியாமல் தம் உள்ளத்தில் இருந்து வெளிப்பட்ட வெண்பா. – ஐஞ்ஜா மாருதம் ஸ்ரீமான். தி.கோ.இராஜகோபாலப் பிள்ளை இயற்றியது.
ஆய்ந்து உரைப்பாரார் இனிமேல் ஆரணத்தின் உட்பொருளை
வாய்ந்த புகழ் அப்பாரியன் திரு நாடு எய்ந்தனளே
அந்தோ இனி நாங்கள் ‘ஆ’ இழந்த ‘சேய்’ ஆனோம்
சிந்தா குலமிகவே சேர்ந்து,
– ஸ்ரீமான் கோ.இலட்சுமண ராமாநுஜ தாலன் ஸ்வாமி
Retired Head Master, Cudduloor
பொறுப்புத் துறப்பு
ஶ்ரீமான் முடிச்சூர் அப்பாரியர் புகழை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் இந்த புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது. ஐடியாமார்ச் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் எந்த வித பொறுப்பும் ஏற்காது.